கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராஜமலை பெட்டிமுடி பகுதி. அங்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக அந்நிறுவனத்தால் கட்டித்தரப்பட்ட வீடுகளில் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வீடுகள் சிக்கி மண்ணில் புதைந்தன.
கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 22 பேர் உயிரிழப்பு
இதையடுத்து மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் குழு, கேரள தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வரை நடைபெற்ற மீட்புப் பணியில், 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் 17 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் ஐந்து பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை வட்டாட்சியர் பாஸ்கரன் உறுதி செய்தார்.
இதன் மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது