தூத்துக்குடி: கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுவருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் மீனவர்கள் இதனால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துகுடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்தனர். மீன்பிடித்தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கரோனா தொற்று, டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மார்ச் மாதம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த ஆண்டில் மட்டும் 71 நாள்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.
மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 240 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்துவரும் நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சுழற்சி முறையில் இன்று 120 விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.
மீன்வர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதுகுறித்து பேசிய விசைப்படகு உரிமையாளர் கிருபா, "தற்போது டீசல் விலை உயர்வு மட்டுமே மீன்வர்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னை.
அரசு சார்பில் 1500 லிட்டர் டீசல் தற்போது மானியமாக வழங்கப்படுகிறது. அதை 5000 லிட்டராக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: விலையேற்றம் விழலுக்கு இறைத்த நீர் - உப்பு விவசாயிகள் வேதனை