தமிழ்நாடு

tamil nadu

நிவாரணம் சரிவர கிடைப்பதில்லை; மீனவர்கள் வருத்தம்!

தூத்துக்குடி: மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணங்கள் சரிவர கிடைப்பதில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

By

Published : Sep 23, 2020, 3:06 PM IST

Published : Sep 23, 2020, 3:06 PM IST

மீனவர்கள் வருத்தம்
மீனவர்கள் வருத்தம்

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆறு மாத காலங்களாக விசைப்படகு மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அத்தியாவசிய பணிகளுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் நாட்டுப்படகு மீன்பிடி தொழிலுக்கு அனுமதி அளித்து அரசு வழிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இருப்பினும் விசைப்படகுகள் கடலுக்குச் சென்று தொழில் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்களும் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 240க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தொடர் தடை காலத்திற்குப் பிறகு சமீபத்தில் கடலுக்குச் செல்ல தொடங்கிய மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மும்முரமாக தொழில் செய்து வந்தனர்.

மீனவர்கள் வருத்தம்

இந்தச் சூழ்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆழ்கடலில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (செப்.23) 240க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

இதுகுறித்து மீனவர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்,

ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள மீனவர்களுக்கு மீன் வளத்துறையின் இந்த எச்சரிக்கை மேலும் கஷ்டங்களை அதிகப்படுத்துவதாக உள்ளது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணத்தொகை சரிவர கிடைப்பதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மீன்வளத் துறையில் இருந்து மீனவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வங்கிகளில் அதுகுறித்து கேட்டதற்கு அது மாதிரியான எந்த அறிவிப்பும் வரவில்லை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என கூறிவிட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தி சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தால் விசைப்படகுகள் சில சமயங்களில் தரை தட்டி சேதமடைகின்றன.

எனவே துறைமுகத்தை ஆழப்படுத்தி மீனவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களைக் கொண்ட மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை இரண்டாகப் பிரித்து உரிய காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணங்கள் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிராமப்புற மாணவர்களுக்கான ஆராய்ச்சி மையம்... அசரவைக்கும் அற்புத இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details