தூத்துக்குடி:தமிழ்நாட்டில் இன்று (ஏப்.15) முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் சுமார் ஐந்து லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ஐந்தாயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் ஏன்?
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிக்க செல்வோர் 61 நாள்களுக்கு யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது என்றும் கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லாத கப்பல்கள்
தடைக்காலம் நள்ளிரவே அமலுக்கு வந்ததால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.