தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம். - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பதிவு செய்த மீன்பிடித்தளத்தை விட்டு விட்டு, வேறு மீன்பிடி தளத்திலிருந்து முறைகேடாக தங்குகடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தூத்துக்குடியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்
தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்

By

Published : Jan 23, 2021, 5:17 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு, 250 விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றன. பல்வேறு சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று படகு உரிமையாளர்கள், தொழில் செய்வதில் தாங்கள் சாதி ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள தருவைகுளம் மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடிக்க அனுமதி தரவேண்டும் எனக் கோரி, தூத்துக்குடி மீன்பிடி தளத்தில் நின்ற தங்களின் விசைப் படகுகளை தருவைகுளத்தில் கொண்டு நிறுத்தியதாக தெரிகிறது.

பதிவு செய்த மீன்பிடி தளத்திலிருந்து வேறு மீன்பிடி தளத்தில் தங்கி, 3 விசைப்படகுகள் தொழில் நடத்திவரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைபடகுகள் காலை 6 மணிக்கு கிளம்பி, மாலை 6 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்பது நடைமுறை.

இந்தநிலையில், இழுமடி வலை விசைப்படகாக பதிவு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட மூன்று விசைப்படகுகளும், செதில்மடி மீன்பிடி தளத்திலிருந்து கிளம்பி தங்குகடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு விசைப்படகுகள், தருவைகுளம் மீன்பிடிதுறைமுகத்திற்கு திரும்பிவிட்டதாகவும், ஒரு படகு கடலில் தங்கியிருப்பதாகவும் தெரிகிறது இதனால் ஆத்திரம் அடைந்த சக தூத்துக்குடி மீனவர்கள், இழுமடி விசைப்படகாக பதிவு செய்துவிட்டு முறைகேடாக, செதில்மடி மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடி தொழில் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா சமரச முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய மீனவ கூட்டமைப்பினர், ஆழ்கடலில் உள்ள விசைப்படகினை அதிகாரிகள் துணையுடன் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு இழுத்து வருவதற்கு அனுமதி தரவேண்டும். மீதியுள்ள இரண்டு படகுகளை தருவைகுளத்தில் இருந்து தூத்துக்குடி கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக மீன்பிடி தொழில் செய்து வந்த படகு உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கு,ஆழ்கடலில் உள்ள மீன்பிடி படகை இழுத்து வருவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பதாகவும், தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை தூத்துக்குடி கொண்டு வருவதற்கு நான்கு நாட்கள் அவகாசம் வேண்டும் என பதில் அளித்து பேசிய மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவை மீனவர்களுக்கு தெரிவிக்கும் வரை கலைந்து போகப் போவதில்லை என தெரிவித்து அமர்ந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல்: விசாரிக்க குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details