வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தூத்துக்குடி விவசாயிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக வேளாண் திருத்த சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விவசாய சங்க நிர்வாகி புவிராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதைத் திரும்பப் பெறக் கோரி பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் விவசாயிகளின் நலன்கருதி வேளாண் துறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் இந்தியளவில் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை எடுப்போம்” என்றார்.