தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை குழுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, முன்னாள் மக்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு பாஜக பலம் வாய்ந்த கட்சியாக வளர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக கட்சியின் சார்பில் பிரதமரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செயல்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீதே பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் சில விதிமுறைகள் உள்ளன. அது கூட தெரியாமல் காவல்துறையினர் பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இந்த அடக்குமுறையை காவல்துறையினர் கையாண்டுள்ளனர். பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாஜக நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்றினால் அதனை இடிப்பதற்கு ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
பாஜக கொடியை கிழிப்பதற்கு காவல்துறையினர் முன் நிற்கின்றனர். இதை அமைச்சர் சொல்லி செய்கிறார்களா மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு தெரிந்தே நடைபெறுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. பாஜக கட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த சூழ்நிலையில், ஆய்வு பணிக்காக 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருவதாக அறிகிறோம்.
எனவே, பிரதமரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடவிடாமல் தடுத்து பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் தூத்துக்குடி வரும் முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்" என்றார்.