தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகளை கால்நடை வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டுவந்தனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக நேற்று (ஜன. 08) இரவு முதலே கொண்டுவரப்பட்டன. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு வழக்கம்போல் ஆட்டுச்சந்தை செயல்படத் தொடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் வந்திருந்தனர்.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகை சந்தையைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் சந்தைக்கு வந்திருப்பதாகவும், ஆடுகள் கணிசமான விலைக்கு விற்பனையாவதாகவும் ஆடு வளர்ப்போர் தெரிவித்தனர்.
ஆடுகள் விலை கிராக்கியாக இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் அசைவ விருந்துக்காக வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூபாய் 7 ஆயிரம் முதல் கிடாய் ஆடுகள் 25 ஆயிரம் வரை விற்பனை ஆனது.