தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடம்பூர் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணை

கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

By

Published : Feb 8, 2022, 5:02 PM IST

தூத்துக்குடி:கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1,605 ஆண் வாக்காளர்கள் 1,690 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 1, 2 மற்றும் 11 வார்டுகளில் தலா இருவர் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னத்துரை ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துப் போலியானது எனத்தெரியவந்ததால், கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் திமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்பாளர்கள் விலகல் ஏதுமில்லை

இதையடுத்து சுயேச்சை வேட்பாளர்களான எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. மற்ற 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் உறுதியானது.

இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாளான திங்கள்கிழமையன்று பேரூராட்சி நோட்டீஸ் போர்டில் மாலை 6 மணி அளவில் 1 முதல் 6 வார்டுகளில் வேட்பாளர்கள் விலகல் ஏதுமில்லை எனப் படிவம் 8 ஒட்டப்பட்டது.

தேர்தல் அலுவலர் சிறைப்பிடிப்பு

இதையடுத்து 1, 2 மற்றும் 11ஆவது வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் திரண்டு வந்து தாங்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு செய்ய வேண்டும்.

கடம்பூர் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம்

அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

உரிய பதில் கிடைக்காத காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அலுவலர்களை 8 மணி நேரம் சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் உருவானது. தேர்தல் நடத்தும் அலுவலர்களைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் 5 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடம்பூரில் முகாமிட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பின்பற்றப்படாத விதிமுறை

இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அந்த அறிவிப்பில், "மாநிலத் தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலைப் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல் இன்று அதிகாலை வரை நீடித்த 13 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: அலுவலர்கள் விதிமீறல்: கடம்பூர் பேரூராட்சித் தேர்தல் ரத்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details