தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் மூன்றுபோகம் செய்யப்பட்டுவந்த விவசாயத்தை, தற்போது ஒருபோகம் செய்வதற்கே விவசாயிகள் திண்டாடிவருகின்றனர். இதனால் பணப்பயிரான பருத்தியை விவசாயிகள் பலரும் விளைவித்துவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், கவர்னகிரி ஆகிய பகுதிகளில் பருத்திப் பயிர்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. வரத்துக் கால்வாய் பாசனம், கிணற்று பாசனம் மூலம் தற்போது நன்கு விளைந்துள்ளன பருத்திப் பயிர்கள். அறுவடைக்குத் தயாராகியுள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவால், அடிமட்ட விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் வருத்தம்தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து புதியம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி வேல்ராஜ் பேசுகையில், ''பருத்தியில் நல்ல மகசூல் கிடைத்தும், ஊரடங்கினால் அதை நல்ல விலைக்கு விற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முதல் வெடிப்பு, இரண்டாம் வெடிப்பு என இரண்டு கட்டங்களிலும் நல்ல மகசூல் உள்ளது. ஆனால் அடிமட்ட விலைக்குக் கேட்பதால் விற்க மனமின்றி செடியிலேயே பருத்தியைப் பறிக்காமல் விட்டுவிட்டோம். இதனால் எங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடித்தால் விவசாயிகள் யாரும் அடுத்த பருவத்துக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்'' என்றார்.
தொடர்ந்து மற்றொரு விவசாயி தங்கவேலு பேசுகையில், ''பருத்தியைப் பறிப்பதற்கே ஆட்கள் கிடைப்பதில்லை. ஒரு குவிண்டால் பருத்தி 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஊரடங்கு காலத்தில், ஒரு குவிண்டால் பருத்தியின் விலை 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு வாங்குகின்றனர். இது பருத்தி பறிக்கும் ஆட்களின் கூலிக்கே சரியாகப் போய்விடும். நிலத்தில் போட்ட மகசூல் லாபத்தைக் கூட எங்களால் பெற முடியாது. பருத்தியை விற்க மனமில்லாமல் அதைச் செடியிலேயே உதிர்வதற்கு விட்டுவிட்டோம். பயிர்க் காப்பீடு தொகையும் எங்களுக்கு வந்து சேரவில்லை'' என்கிறார்.