தூத்துக்குடி:சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தினர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கனிமொழி, "மத்தியில் உள்ள ஆட்சிக்கு தலையாட்டி பொம்மைகளாக இங்குள்ளவர்கள் செயல்படுகிறார்கள். சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது ஒவ்வொருவரின் குடும்பத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மத்திய அரசு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் பொழுது தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு தலையாட்டிகளாக இருக்கமாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் செய்யும் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்களாக, போராடுபவர்களாக இருப்பார்கள்" என்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தாண்டில் பலமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த விலை உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகிறோம். மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை என்றால் திமுக மகளிர் அணியின் சார்பில் போராட்டம் நடத்துவோம். விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அப்போது எல்லாம் மாறும்" என்றார்.
இதையும் படிங்க:'தோல்வி பயத்தினால் முதலமைச்சர் 2ஜி வழக்கு குறித்து பேசிவருகிறார்'- கனிமொழி குற்றச்சாட்டு