உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். இந்த பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் இந்த ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணி மே 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் துவங்கப்பட்டது. அப்போது ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியிலும் இந்த அகழாய்வு பணி தொடங்கியது.
ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர், அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஆய்வு குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் பாண்டியராஜா கோயில் அருகில் தோண்டிய பள்ளத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) ஆறு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஐந்து தாழிகள் அருகருகே இருந்தன. அதில் மூன்று தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன. முதுமக்கள் தாழிகளின் அருகில் மண்பாண்ட கிண்ணங்களும் இருந்தன.
மேலும், கால்வாய் கிராமத்திற்கு செல்லும் சாலை பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மற்றொரு முதுமக்கள் தாழி உள்ளது. ஆதிச்சநல்லூர் கிராமம் பகுதியில் தோண்டிய குழியில் பெரிய மண்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அங்கு பழங்கால மக்களின் வாழ்விடம் இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.