தமிழ்நாடு மின் ஊழியர் சங்கம் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக தூத்துக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உயர் அலுவலரைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படும் மின் உயர் அலுவலரைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து மின் ஊழியர் சங்கம் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
"தூத்துக்குடி நகர மின் பொறியாளராக விஜய சங்கர பாண்டியன் என்பவர் பணியாற்றிவருகிறார். மின்வாரியத்தின் விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக விஜய சங்கரபாண்டியன் ஒரே இடத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் அவர் தொழிலாளர்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதை எதிர்த்து கேட்டால் எதிர்த்து கேட்பவர்களை பணியிடை நீக்கம் செய்வது, அவர்களின் வருங்கால வைப்பு நிதி பல பலன்கள் கிடைக்கப்பெறாமல் செய்வது உள்ளிட்ட தொழிலாளர் விரோத போக்கினை கையாண்டுவருகிறார்.
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜுவுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டவர் என்பதனால் அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் மீது தூத்துக்குடி தலைமை மின் பொறியாளரிடம் புகார் அளிக்கப்பட்டதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விஜயசங்கர் பாண்டியனின் கைப்பாவையாக தலைமை பொறியாளர் செயல்படுகிறார்.