தூத்துக்குடி: போல்பேட்டை பகுதியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உழவர் சந்தையும், புதிய பேருந்து நிலையமும் இயங்கி வருகின்றன. தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு நடைபெறுகிறது.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நோட்டீஸ்
இதன் மூலமாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் தொகை வருவாயாக ஈட்டி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தண்ணீர் வரி பாக்கித்தொகை ரூ.48 ஆயிரத்தைச் செலுத்தக்கோரி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் மாநகராட்சியின் எச்சரிக்கை நோட்டீசையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், பத்திரப்பதிவு அலுவலகத்தினர் தண்ணீர் வரி கட்ட வேண்டிய தேதிக்கான கால அவகாசத்தையும் மீறியதன் காரணமாகப் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் இணைப்பைத் துண்டிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, தூத்துக்குடி வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங் தலைமையில், உதவிப் பொறியாளர் பாண்டி, வருவாய் அலுவலர் வீரக்குமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தின் குடிநீர் குழாய் இணைப்பை ஜன.7ஆம் தேதியன்று துண்டித்தனர்.