தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதார நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "தொற்று பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைவரும் ரத்த, சளி மாதிரி பரிசோதனை செய்து கொள்வதற்காக 12 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை மையங்கள் தினசரி காலை முதல் மாலை வரை செயல்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி உழவர் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 150 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் 21க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே கடந்த ஐந்து தினங்களாகச் சந்தைக்குக் சென்றுவந்தவர்கள் தாங்களாகவே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.