தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேங்கிய மழை வெள்ளத்தில் கடலில் சென்று கலக்கும் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புக்குள்ளானதால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது.
குறிப்பாக மாநகரப் பகுதிகளில் ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் தொடங்கி கதிர்வேல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை வெள்ள நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது. இரண்டு வாரங்களாக இந்த மழை வெள்ளம் குடியிருப்பில் சூழ்ந்துகொண்டு வெளியேற முடியாமல் நோய்த்தொற்று பரப்பும் சூழலை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில் ஸ்டாலின், தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வுசெய்ய நேற்று (டிசம்பர் 2) விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தடைந்தார். மதியம் 3 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பிரையன்ட் நகர் பகுதியில் ஆய்வுசெய்த ஸ்டாலின், சாலையில் தேங்கியுள்ள நீரில் இறங்கி அங்கு காத்திருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.