தூத்துக்குடிவிமான நிலையத்தை தரம் உயர்த்தும் பணியின் ஒரு பகுதியாக, 600 பயணிகளை கையாளும் வகையில், ஏ-321 ரக விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் ஒருபகுதியாக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவும், ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு புதிதாக விமான சேவையை தொடங்கப்பட உள்ளது.
முழுவீச்சில் கட்டுமானப் பணிகள்:முன்னதாக தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசு ரூ.381 கோடி நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று (செப்.10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தூத்துக்குடி விமான நிலையத்தில் 13 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டுமானம் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஓடுதளம் விரிவாக்கப் பணிகள்: இங்கு சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடுதளம் மட்டுமே இருந்து வரும் நிலையில், பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேப் போன்று, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.