தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவுக்குட்பட்ட ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருடைய ஆடுகள், வழக்கமான மேய்ச்சல் இடத்தை விட்டுவிட்டு, அருகிலிருந்த ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவரின் நிலத்தில் மேய்ந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த, ஆதிக்கச்சாதி நில உரிமையாளர் ஆடுகளை பிணையாகப் பிடித்துக்கொண்டு, ஆட்டின் உரிமையாளரான பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை தன் சாதியினர் அனைவரது காலிலும் விழ வைத்து சாதிய வன்கொடுமைச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வேகமாகப் பரவி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்து கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறனர்.
இதையும் படிங்க :ஹத்ராஸ் சம்பவம்: உபா சட்டத்தில் நால்வர் கைது