தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகம் திருவிழா வருகிற 12ஆம் தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய அனைத்து விதமான முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருவிழாக் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருக்கோயிலுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் ஏற்பாடு செய்ய நகராட்சியினரை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், ஆத்தூர் நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் ஆகிய இடங்களில் 11-06-2022 முதல் 13-06-2022 முடிய மூன்று நாட்கள் தங்கு தடையின்றி மின் விநியோகம் செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தப்பட்டது.
மூன்று நாட்கள் தரைவழித் தொலைபேசி மற்றும் அலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகள் செய்யவும், திருக்கோயிலின் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினர் இத்திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.