தூத்துக்குடி:தூத்துக்குடி: வல்லநாட்டில் 14.6 சதுர கிலோ மீட்டர் பரப்பில் வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா, முயல், நரி, பலவகையான பாம்புகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளும், ஏராளமான வகை பறவைகளும் காணப்படுகின்றன. இந்த சரணாலயத்தில் மான்களை பொதுமக்கள் கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றுலா தொடங்குவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வல்லநாட்டில் வெளிமான் சரணாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 225 வெளிமான்கள், 53 புள்ளிமான்கள், 36 மிளா ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோல் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 136 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் வல்லநாடு சரணாலயத்தில் 86 வகையான பறவைகள் உள்ளன. இது கண்ணால் பார்த்து கணக்கிடப்பட்டவைதான். இதைவிட அதிக அளவிலான மான்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சரணாலயத்தில் 4 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஏராளமான மான்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த சரணாலயத்தில் சூழல் சுற்றுலா தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், "சரணாலயத்தின் நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் சென்று மான்களை பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மான்கள் எந்த இடத்தில் அதிகமாக வரும், எந்த இடத்தில் இருந்து பார்க்கலாம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.