தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் கோரம்பள்ளத்திலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் சேது, "மத்தியில் பிஜேபி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது கட்டுமானத் தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்கும் வகையில் உள்ளது. மேலும் நலவாரியங்களை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து, நலவாரியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 40,000 கோடி ரூபாயை மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கிறது. இது கட்டுமான தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். விபத்தின் மூலம் ஏற்படும் மரணத்திற்கான இழப்பீடு நிதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகை, நலநிதி, காப்பீடு உதவித்தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கவேண்டும். இதற்கு பின்னரும் எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் மாவட்ட அளவில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.