தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் ரூ.380 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 1,350 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளம், 3,115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படுகிறது. ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதியான உள்ளூர் விமான முனையமும் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜின்டால் தூத்துக்குடி வந்தார். அவர் விமான ஓடுதளம், விமானம் நிறுத்தும் இடம், பயணிகள் முனையம், சிக்னல் மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, விமான நிலையத்துக்கு பிரத்யேகமாக 22/33 கே.வி திறன் கொண்ட 2 மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். விரிவாக்கப் பணியின் போது ஒழுங்குமுறை ஆணையத்த்தில் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் விமான நிலைய வளாகத்தில் ரூ.28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜின்டால் திறந்து வைத்து, அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார்.
விமானநிலைய ஆலோசனைக் கூட்டம்?
இதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம், அதன் தலைவரான தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. குழுவின் மாற்றுத் தலைவரான ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் உறுப்பினர்களான தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமான நிலைய விரிவாக்க பணிகள், விமான நிலையத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.