தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘ஓபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி’ - முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் - slams admk

தூத்துக்குடி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அரசியல் வியாபாரி என அதிமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் விமர்சனம் செய்துள்ளார்.

ஜி.வி.மார்க்கண்டேயன்

By

Published : Apr 10, 2019, 12:17 PM IST

அதிமுக குறித்து விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன் பேசுகையில், தன்னை தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள அதிமுக அமைச்சர்கள் 10 கோடி ரூபாய் பேரம் பேசியதாகத் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மார்க்கண்டேயனும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி, எட்டயபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மார்க்கண்டேயன் ஒரு ஓடுகாலி - அரசியல் வியாபாரி என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.

இதைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘எட்டயபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் என்னை அரசியல் வியாபாரி எனக் கூறியுள்ளார். நான் 10 ஆண்டு காலம் புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளேன். அதிமுகவில் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளேன். 10 ஆண்டுகள் தலைமைக் கழகப் பேச்சாளராக பணியாற்றியுள்ளேன். இதுவரை அரசியலில் என்ன வியாபாரம் பார்த்தேன் எனத் தெரியவில்லை.

ஏற்கனவே நான் கூறியது போல், 2,312 கோடி ரூபாய் வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசியல் வியாபாரியா? அல்லது நான் அரசியல் வியாபாரியா? என்பது தெரியவில்லை. மிக விரைவில் மக்கள் மன்றத்தின் இது தெரியவரும். பன்னீர்செல்வத்துக்கு என்னைப் பார்த்து அச்சம். நான் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்குக் காரணமே, இத்தொகுதியில் வெற்றி பெற்று கட்சியை ஒன்று சேர்ப்பதற்கான நியாயத்துக்காகப் போட்டியிடுகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார்.

நான் அரசியலைச் சேவையாகப் பார்க்கிறேன். ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். நான் அரசியல் வியாபாரி அல்ல. அரசியல் வியாபாரமாக்கியது ஓ.பன்னீர்செல்வம்தான்’ என்றார் அவர். ஏற்கனவே மார்க்கண்டேயன் - அமைச்சர் கடம்பூர் ராஜு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் - மார்க்கண்டேயன் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details