தூத்துக்குடி:தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு, தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆலோசனையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலரை காவல்துறை கைது செய்து வருகின்றனர்.
குட்கா விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு வந்த மொத்த விற்பனையாளர்கள் யார் எனறு கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் மேற்பார்வையில், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட வாஷிம் பாஷா, செல்வா, காளிமுத்து, அருள்ராஜ், ஜேசுபாலன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து, அவர்கள் யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் பின்னிபேட்டை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் சாமுவேல் (50) சிக்கியுள்ளார். இவர், கம்பெனிகளே இல்லாமல் போலியாக கம்பெனிகள் இருப்பதாக சாம் எண்டர்பிரைசஸ், லேண்ட் ஸ்டார் மற்றும் செல்வி எண்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கணக்குகளை தொடங்கியுள்ளார்.
அவற்றின் மூலம் காய், கனி விற்பனை மூலம் கிடைத்த பணம் என குறிப்பிட்டு, குட்கா விற்பனை மூலம் பெற்ற பணத்தை தனது வங்கி கணக்குகளில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு தனது வேலையாட்கள் மூலம் பெருமளவில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.