தூத்துக்குடி:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று(அக்.03) நள்ளிரவில் முத்தாரம்மன் கோயிலில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மாடசாமிபுரம் அருகே சாலையோரத்தில் பிறந்து 15 நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை துணியில் சுற்றி விட்டுச்சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் பச்சிளம் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு பச்சிளங்குழந்தைக்குத் தேவையான சிகிச்சையளித்து பராமரித்து வருகின்றனர்.
தசரா திருவிழா நடைபெற்று வருகின்ற நேரத்தில் கோயில் அருகே பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற நபர்கள் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன அழகான பச்சிளம்குழந்தையை சாலையோரத்தில் விட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தினமும் 20 மணிநேரம் வேலை - துபாய்க்கு வேலைக்குச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை