தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டை காலிசெய்ய சொன்னதால் பைக்குகளுக்குத் தீவைப்பு: ஒருவர் மரணம்! - 9 bikes arson in Tuticorin

தூத்துக்குடி: வீட்டை காலிசெய்ய சொன்னதால் ஒன்பது இருசக்கர வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

பைக்குகளுக்குத் தீவைப்பு
பைக்குகளுக்குத் தீவைப்பு

By

Published : Oct 13, 2020, 10:25 PM IST

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் கிளியோபாட்ரா திரையரங்கு அருகில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான காம்பவுண்டில் 20 வீடுகள் உள்ளன.

இங்குள்ள ஒரு வீட்டில் நடராஜன் மகன் அண்ணாமலை (42) என்பவர் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்திவந்தார்.

அந்தக் காம்பவுன்டில் குடியிருந்த மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரை வீட்டை காலிசெய்ய வைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்துவந்த அவர் நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் அங்கு வந்து தகராறு செய்துள்ளார்.

மேலும் காம்பவுண்டிற்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்குத் தீவைத்துள்ளார். இதில், ஒன்பது வாகனங்கள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. மேலும் அண்ணாமலை வீட்டிற்குள்ளும் தீப்பரவியது.

தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தீவிபத்தில் அவரது மகன் நித்தின் (8) காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாடியில் உறங்கியதால் அவரது மனைவி கங்கா தேவி, மற்றொரு மகன் நிகில் (6) ஆகியோர் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் விரைந்துவந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டவுன் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details