தூத்துக்குடி:கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ உ சிதம்பரனார் துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை உலகநாதன் பிள்ளையைப் போலவே இவரும் சட்டம் பயின்று புகழ்பெற்ற வழக்கறிஞரானார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லும் ஏழை எளிய மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நாளடைவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பொது கூட்டங்கள், பத்திரிகைகள் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை விதைத்தார்.
இவரது போராட்ட குணத்தையும், நாட்டின் மீது கொண்ட வியத்தகு பற்றையும் கண்ட தலைவர்கள் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்றும் அழைத்தனர். 1905ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு, முழு முயற்சியாக ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தொடங்கினார். இதனிடையே அவருக்கு பால கங்காதர திலகர், அரபிந்தோ கோஷ் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் நட்பும் கிடைத்தது.
ஆங்கிலேயே கப்பல் கம்பெனிகள் மூலம் இலங்கை கடலோரங்களில் இயக்கப்படும் கப்பல்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டன. அதோடு கடல் வாணிபம், போக்குவரத்து முழுவதும் ஆங்கிலேயர்களால் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வ உ சிதம்பரனார் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். இதனை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார். இறுதியாக கப்பல் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார்.
ஆனால், அவருக்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் தனது சொத்துக்களை முழுவதும் விற்று, அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் 1906ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ கப்பல் நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ என்னும் இரண்டு நீராவி கப்பல்களை வாங்கினார். தூத்துகுடி-இலங்கை இடையே போக்குவரத்தை தொடங்கினார். பொதுமக்களிடையே வ உ சி கப்பல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.