தூத்துக்குடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை நேற்றைய முன்தினம் (ஜூன் 6) காலை 8 மணியளவில் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் இருந்த உலோக டாலரை விழுங்கிவிட்டது. இந்நிலையில் அக்குழந்தைக்கு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் டி.நேருவின் அறிவுறுத்தலின்படி, காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிவசங்கரி, சந்தானகிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழுவின் பலராமகிருஷ்ணன், சுகிர்தராஜ் ஆகியோர் அடங்கிய அவசரக்குழுவினர் குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக முழு மயக்க மருந்து அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து பின்னர், உணவுக்குழாய் உள் நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண்டையில் இருந்த உலோக டாலரை பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர். இக்குழந்தையானது, தற்போது ஆரோக்கியமாக உள்ளது.