தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவிற்குப்பின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதா?' - ஈடிவி பாரத் கள ஆய்வு - கரோனாவிற்குப் பின் நகர்புற சுகாதார நிலையங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தாக்கத்திற்குப் பின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதா? என்பது குறித்த ஈடிவி பாரத் கள ஆய்வு முடிவுகள் குறித்து காணலாம்.

were-urban-health-centers-improved
were-urban-health-centers-improved

By

Published : Dec 3, 2020, 12:00 PM IST

Updated : Dec 14, 2020, 7:03 AM IST

உலகை உலுக்கிய கரோனா வைரஸ், மார்ச் மாதம் இறுதியில் தமிழ்நாட்டிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அப்போது தொடங்கி தற்போதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 880 பேர் கரோனாவால் பாதிக்கப்படுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சொல்லப்போனால், திருநெல்வேலியில் கடந்த இரண்டு மாதங்களாக கரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி நாள்தோறும் சராசரியாக ஐந்து முதல் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. திருநெல்வேலியைப் பொறுத்தவரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைதான் கரோனா சிகிச்சையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அங்குள்ள கரோனா பிரிவில் நாளொன்றுக்கு 100 நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் நகரின் பிற பகுதிகள் முதல் குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் வரை அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது. அவர்களை எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்க அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்படி மாநகரில் 9 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், புறநகரில் ஓர் சுகாதார நிலையம் என மொத்தம் 10 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்கு மருத்துவர்கள், செவிலியர், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டோர், பணிபுரிந்துவருகின்றனர்.

கரோனாவிற்குப்பின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்

அவற்றில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், புறநகர் சுகாதார நிலையம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலும் இயங்கிவருகின்றன. அதையடுத்து நகர்ப்புற சுகாதார நிலையங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 1,800 பேரும், மாதத்திற்கு 60,000 பேரும் புற நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனர்.

அதேபோல் புறநகர் சுகாதார நிலையத்தில் நாளொன்றுக்கு 30ஆகவும், மாதத்திற்கு 900 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் பெரும்பாலானோர் ஏழை, நடுத்தர மக்கள். உறுதிப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு மாவட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் செவிலியர், களப்பணியாளர்கள் கரோனாவிற்குப் பின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி அவர்கள் மூத்த செவிலி தலைமையில் களப்பணியாளர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தெருக்கள்தோறும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவந்தனர். குறிப்பாக கரோனா, பிற நோயாளிகளை அடையாளம் காணுதல், பிரித்தல், முதலுதவி சிகிச்சை அளித்தல், உரிய ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் முன்பைவிட கரோனாவிற்குப் பின் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால் கரோனா சிகிச்சை அளிக்க உரிய உபகரணங்கள் தட்டுப்பாட்டால், கரோனா சிகிச்சை அளிப்பதில் மட்டும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிற நோய்களைக் கண்டறிதல், கவனித்தலில் பெருமளவு முன்னேற்றம் என்பது நிதர்சனம். அதேபோல இதுபோன்ற சூழலில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு, பாதுகாப்பான நடைமுறைகளைத் தெரியப்படுத்துவதிலும் முன்னேற்றம்தான்.

ஆரம்பத்தில் நோய்த்தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது அனைத்து தெருக்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவரே நேரடியாக முகாம்களுக்குச் சென்று மக்களிடையே வெப்ப அளவை பரிசோதித்தல், ரத்த அழுத்தம், மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் கரோனா காரணமாக பிற நோய்களுக்கான சிகிச்சை தாமதப்படுத்தப்படுகிறதா என்பது குறித்த முடிவுகளில், பெரும்பாலான சுகாதார நிலையங்களில் கரோனா உள்பட அனைத்துப் பிற நோயாளிகளுக்கான சிகிச்சையும் முறையாக வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவான பாதிப்பான காய்ச்சல், சளி, இருமல், மூட்டு வலி, வயிற்று வலி, சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் சுகாதார நிலையங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இருதய நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகள் மட்டும் சில நகர்ப்புற சுகாதார நிலையங்களில் இருப்பில் இல்லாதது தெரியவந்துள்ளது.

இது குறித்து மூத்த மருத்துவ வல்லுநரும் பாளையங்கோட்டை நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவருமான தமிழரசி கூறுகையில், "கரோனா தாக்கத்தைப் பொறுத்தவரை முன்பிருந்ததைவிட அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். முகாம்களில் முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தமாக வைத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். கரோனா தாக்கத்தில் அதிகம் பாதிக்கப்படும் முதியோர், நீரிழிவு தொற்றாளர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை கவனித்துக்கொள்கிறோம்.

அவர்களுக்கான தடுப்பு மருந்துகள் முறைப்படி வழங்கப்படுகின்றன. ஆரம்பத்தில், நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதியை முடக்கி அங்கு முகாம் அமைத்து கண்காணித்துவந்தோம். ஆனால், தற்போது நகர்ப்புறத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன.

நோய் கண்டறிதல், முன்னெச்சரிக்கையாகச் செயல்படுதல், உடனடியாகச் சிகிச்சை என நகர்ப்புற சுகாதார நிலையங்களின் பங்கினால் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அளவு கரோனா உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் மதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் - ஆர்டிஐ-யில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

Last Updated : Dec 14, 2020, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details