தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும். இதனால் அதிக வெப்பம் ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு ஆரோக்கியமான உணவுகளை இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் தர்பூசணி பழம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் தர்பூசணிப் பழங்கள் விற்பனை அதிகளவில் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களில் விளைச்சல் செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு தயாரானது. ஆனால் தற்போது கரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் அறுவடைசெய்த பழங்களை அனுப்ப முடியாமல் விவசாயிகள் அல்லல்பட்டுவருகின்றனர். கடும் சிரமத்திற்கிடையே பழங்களை அனுப்பினாலும், அதை மக்களிடம் விற்பனைசெய்ய முடியாமல் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் அதிக அளவு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு சாலையோரங்களில் குவிக்கப்பட்டன.
ஊரடங்கால் தர்பூசணி வியாபாரம் பாதிப்பு ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது வியாபாரம் மந்தமாக உள்ளது. பொதுவாக வெயில் நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தர்பூசணி பழங்களை வாங்கிச் செல்வார்கள். தற்போது வாகனப் போக்குவரத்து மட்டுமின்றி ஆள்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால், சாலையோரங்களில் கடை வைத்துள்ள தர்பூசணி வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலையோரத்தில் தர்பூசணி வியாபாரம் செய்துவரும் ராஜகோபால் கடும் இழப்பைச் சந்தித்துவருவதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் இரண்டு ஆண்டுகளாகத் தர்பூசணி வியாபாரம் செய்துவருகிறேன்.
வெயில் காலங்களில்தான் தர்பூசணி பழத்துக்கு மவுசு இருக்கும். தற்போது கரோனா காரணமாக பழங்கள் விற்பனை ஆகவில்லை. இதனால் பழங்கள் அழுகி வீணாகிப் போகின்றன. வியாபாரத்தில் கடும் இழப்படைந்துள்ளேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.