திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார் டிரைவராக பணிபுரிந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில், மணிகண்டன் கையில் மூன்று அடி நீளமுள்ள வாளுடன் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மத்திய சிறையில் அடைப்பு
இதையடுத்து, மாநகர காவல் துறை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இந்த காட்சியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் (ஆக. 20) அந்த காணொலியில் இருந்தவர் மணிகண்டன் என்பதை அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து காவல் துறையினர் கொலை மிரட்டல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து மூன்று அடி நீளமுள்ள வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா?