திருநெல்வேலி: கடந்த ஆண்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, படிப்படியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில், 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க, கடந்த நவம்பர் மாதத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இருந்தும் புதிய, பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் திரையரங்குகளுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் வரவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகியது. நீண்ட நாட்களுக்கு பின்னர், அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மீண்டும் மக்களை திரையரங்கு நோக்கி திரும்ப வைத்திருப்பது திரைத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.