தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Manonmaniam Sundaranar University: தேர்தல் குழுவிற்கான தேர்தல் ரத்து: நெல்லை பல்கலைக்கழகத்தில் அடுத்த சர்ச்சை - அருந்ததி ராய்

பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குழுவிற்கான தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதையடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

நெல்லைப் பல்கலைக்கழகத்தில் அடுத்த சர்ச்சை
Manonmaniam Sundaranar University

By

Published : Nov 19, 2021, 11:05 PM IST

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் (Manonmaniam Sundaranar University) துணைவேந்தர் (Vice-Chancellor) பிச்சுமணியின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்தல் குழு அமைப்பதற்கான தேர்தல் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதனால், சிண்டிகேட் மற்றும் செனட் சபையிலிருந்து தேர்தல் குழுவிற்கு ஒருவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை சிண்டிகேட் சபையில் 50-க்கும் குறைவானவர்களே உள்ளனர். அதே சமயத்தில் செனட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

எனவே இவற்றில் ஒருவர் தேர்தல் குழுவில் இடம்பெற ஆர்வம் காட்டி உறுப்பினர்கள் தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய துணை வேந்தர் பிச்சுமணி தனது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில் மேலிடம் சிபாரிசு மூலம் தேர்தலை தள்ளி வைத்திருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து துணைவேந்தர் பிச்சுமணியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “வேண்டுமென்றே தேர்தல் நிறுத்தி வைக்கப்படவில்லை, சில தொழில்நுட்ப கோளாறு மற்றும் மழை வெள்ளம் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழை வெள்ளத்தால் உறுப்பினர்களை சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை; எனவே மீண்டும் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு நடுவே துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு

ABOUT THE AUTHOR

...view details