பாளையங்கோட்டை சிறையில் கைதி உயிரிழப்பு: மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை - திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறை
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் முத்துமனோ என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கைதி முத்து மனோ என்பவர் சிறையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்துமனோவின் உறவினர்கள் தொடர்ந்து அவரின் உடலை வாங்காமல் 70 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து சிறைத்துறை தலைமை இயக்குனரிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமை ஆணையம் சிறைத்துறை தலைமை இயக்குனர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.