தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திசையன்விளை; திருமண ஆசைக்காட்டி அத்துமீறிய இளைஞர்களுக்கு வலை! - காவல்துறை விசாரணை

திசையன்விளையில் திருமண ஆசைக்காட்டி பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்கள் இருவரை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

வலைவீச்சு
வலைவீச்சு

By

Published : Jan 20, 2022, 7:13 PM IST

திருநெல்வேலி: திசையன்விளை பகுதியில் திருமணம் செய்வதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு பெண்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் சசிகலா. இவருக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.

கணவனை இழந்த பெண்

சசிகலாவுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், திசையன்விளை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் ஒன்றாக கணவன்-மனைவி போல் வாழ்ந்துவந்துள்ளனர். இதன் காரணமாக சசிகலா இரண்டு முறை கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது.

மூன்று முறை கர்ப்பம்

இந்தக் கர்ப்பத்தை முத்துவின் பேச்சைக் கேட்டு சசிகலா கலைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பமான சசிகலா தன்னை திருமணம் செய்யக்கோரி முத்துவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு முத்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார்- விசாரணை

இந்தப் புகாரின் அடிப்படையில், திசையன்விளை காவல்துறையினர் முத்துவை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அவர் சசிகலாவைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சமாதானமாகப் பேசி அனுப்பி வைத்தனர்.

ஆனால், இன்றுவரை சசிகலாவை முத்து திருமணம் செய்யவில்லை. மேலும், சசிகலாவை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சசிகலா முத்துவின் வீட்டு முன்பு தன்னை திருமணம் செய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மற்றொரு புகார்

இந்நிலையில், திசையன்விளையில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. முத்து பேச்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காட்டேரி என்பவரது மகள் பிரியங்கா. நர்சிங் படித்துள்ள இவரும், அவரது வீட்டின் அருகேயுள்ள அந்தோணி ராஜ் என்பவரது மகன் அஜித்குமாரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் பிரியங்காவைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஆந்திராவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை வழக்கு பதிவு

மேலும், பிரியங்காவை ஏமாற்றி 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை அஜித் குமார் ஏமாற்றி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தன்னை ஏமாற்றிய அஜித் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியங்காவும் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

2 புகார்களையும் பெற்றுக்கொண்டு திசையன்விளை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் பாலியல் புகாரில் கைது

ABOUT THE AUTHOR

...view details