வாசல்:
கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், திருநெல்வேலி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியையும், திருநெல்வேலி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் என, ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
தொகுதிகள் வலம்:
திருநெல்வேலி : மாநகராட்சியின் சில வார்டுகளும், பேரூராட்சிகள், ஊராட்சிகளை உள்ளடக்கியத் தொகுதியாக இருக்கிறது திருநெல்வேலி. தாமிரபரணி பாசன கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கியதால், தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். முப்போகம் விளைந்த நிலையில், தற்போது கார், பிசான சாகுபடிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் மழைக் காலங்களில் உபரி நீரை தேக்கி வைக்கப் புதிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழில் வளர்ச்சியில் இன்னும் பின் தங்கியே இருக்கின்றது திருநெல்வேலி தொகுதி. தொழில் வாய்ப்புகளுக்காகக் கங்கை கொண்டானில் உருவாக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில், 10க்கும் குறைவான நிறுவனங்களே இயங்கி வருவது இளைஞர்களின் கனவுகளைப் பொய்யாக்கியுள்ளது.
இந்தத் தொகுதியின் பிரதான பிரச்னையாக இருப்பது சாலை வசதியின்மை. மாவட்ட தலைநகரிலிருந்து நகரத்தின் ஊடாகச் செல்லும் சாலை நிரந்தரமாக குண்டும், குழியுமாகவே காட்சியளிப்பது தொடர் கதையாக நீள்கிறது.
நகரத்தின் மத்தியில் பாசன குளமாக இருக்கும் நயினார் குளத்தில் கழிவுகள் கலப்பதைக் கட்டுப்படுத்த படகு குழாம் அமைக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாதது ஏமாற்றமாகவே தொடர்கிறது.
அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடங்கி சமவெளி வரை நீண்டு கிடக்கிறது இந்த தொகுதி. நிலமெல்லாம் பச்சைப் போர்த்திய மருத நிலங்கள் விரிந்து கிடப்பதால், பாரதி ராஜா தொடங்கி, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் வரையிலான இயக்குநர்களின் கிராமங்கள் சார்ந்தப் படங்களில் தவறாமல் இடம் பிடித்து விடுகின்றன அம்பாசமுத்திரம் சுற்று வட்டார கிராமங்கள்.
மணிமுத்தாறு அணையும், தாமிரபரணி பாசனமும் விவசாயத்தை வளங்கொழிக்க வைத்தாலும், காட்டு உயிர்களால் விவசாயப் பயிர்கள் சேதமடைவது தவிர்க்கப்பட வேண்டும், காட்டு உயிர் வருகையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.தனது பிரத்யேகத் தயாரிப்புக்காக தேசிய, மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பத்தமடை கோரை பாய் தொழில் நலிவடைந்து வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாய் உற்பத்தியாளர்கள், தொழிலை விரிவுப்படுத்த வங்கிகளில் கடன் வழங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வர்த்தக மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது.
இத்தொகுதியில் நலிவடைந்து வரும் மற்றொரு தொழில் காருகுறிச்சி மண்பாண்டங்கள்.பாண்டங்கள் செய்வதற்கான மூலப்பொருள் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்வதோடு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மண்பாண்ட தொழில் பயிற்சி மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்கின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள்.
பாளையங்கோட்டை:தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் இரட்டை நகரங்களில் ஒன்று பாளையங்கோட்டை. மருத நிலங்கள் நிறைந்த நெல்லை மாவட்டத்தில் கிராமங்களே இல்லாத தொகுதியாகப் பாளையங்கோட்டை விளங்குகிறது.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் அதிகம். தொகுதியின் மையப்பகுதியாக விளங்கும் மேலப்பாளையம் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதி; இங்குள்ள பெண்களின் முக்கியத் தொழில் பீடி சுற்றுவது.அரசு அலுவலர்கள் முதல் கூலித் தொழிலாளி வரை கலவையான வாக்காளர்கள் இருக்கும் இத்தொகுதியின் முக்கியப் பிரச்னை முறையான கழிவுநீர் மேலாண்மையின்மை. சரியான திட்டமிடல் இல்லாததால் நீர்நிலைகள், தெருக்களில் கழிவு நீர் தேங்கும் நிலை உள்ளது.
அதே போல தொகுதியின் முக்கியப் பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாகச் சொல்லப்படுகிறது. நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அருகேயுள்ள பகுதியில் ஏற்படும் போக்குவரத்து இடையூரைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும், தொகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கையாகும். தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் மேலப்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாது தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருக்குப் பெரும் பின்னடைவு.