திருநெல்வேலி:தமிழ்நாட்டில்வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு, வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. திருநெல்வேலியில் நேற்று (நவ. 3) நண்பகல் தொடங்கிய கனமழை இன்று (நவ. 4) அதிகாலை வரைத் தொடர்ந்து பெய்தது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக பிரதான அணைகள் முழுக் கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உபரி நீர் வெறியேற்றம்
கன மழையினால் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளம், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்டவைகள் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 1,300 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது தவிர கடனாநதி, ராமநதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் 850 கனஅடி நீர், காட்டாற்று வெள்ளம் ஆகியவை சேர்ந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது.
சேரன்மகாதேவியில் அதிக மழை
மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 125 மி.மீட்டரும், பாளையங்கோட்டையில் 78 மி.மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது. மொத்தமாக, திருநெல்வேலியில் 50.5 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வானப் பகுதிகளைத்தொடர்ந்து மாவட்ட வருவாய், பேரிடர் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்தது வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் மறு உத்தரவு வரும் வரை குளிக்கவும் வேடிக்கை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி(முருகன்) திருக்கோயிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.
இதையும் படிங்க: நரிக்குறவர், இருளர் மக்களுக்கு முதலமைச்சரின் தீபாவளி பரிசு!