திருநெல்வேலி டவுன் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்தில், நெல்லை நரசிங்க நல்லூரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அன்பழகன், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் விஸ்வ ரஞ்சன், பழவூர் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சுதீஸ் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.
உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகச் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் மாணவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி, தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
முன்னதாக முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதற்காகத் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசின் உயர் அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர்.