தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2021, 7:26 PM IST

ETV Bharat / city

நெல்லையில் தொடர் கொலை - பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களுக்கு தடை

திருநெல்வேலியில் ஏற்படும் தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலியாக தனியார் பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களை ஒளிபரப்புக் கூடாது என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களை ஒளிபரப்பு தடை
பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களை ஒளிபரப்பு தடை

திருநெல்வேலி:கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியது. சாதி ரீதியாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தக் கொலை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், பாளையங்கோட்டையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்களுக்கு இடையே சாதி மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சாதி மோதல்கள் தலைதூக்கி இருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களை ஒலிப்பரப்ப கூடாது என மாவட்ட காவல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாடல்களுக்கு தடை

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (அக்.23) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சாதி ரீதியாக நடந்த கொலை சம்பவங்களைத் தொடர்ந்து ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை

இதனைக் கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் தனியார் பேருந்துகளிலும் சாதி, மத ரீதியான பாடல்கள், வசனங்கள் ஒலிப்பரப்புவதை தவிர்க்குமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறி செயல்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மாணவர்களிடையே சாதி மோதல்கள் ஏற்பட சினிமா வசனங்கள், சினிமா பாடல்கள் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள், சமூக ஆர்வலர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை - நீதிமன்றம் வேதனை

ABOUT THE AUTHOR

...view details