திருநெல்வேலி: ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஆயிரத்து 113 பதவிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. ஆனால் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் கடைசி நேரத்தில் வாக்காளர்கள் கூட்டமாகத் திரண்டதால், அவர்களால் 6 மணிக்குள் வாக்களிக்க முடியவில்லை.
எனவே டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல மையங்களில் வாக்குப்பதிவு முடிவதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 3 மணி வரை 52.01 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவுகள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிவுபெற்ற வாக்குச்சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல்வைக்கும் பணிகள் முடிந்தது. முன்னதாக அலுவலர்கள் வைத்துள்ள பூத் ஸ்லிப் படிவத்திலும், முகவர்கள் வைத்துள்ள படிவத்திலும் வாக்களித்தவர்களின் எண்ணம் ஒத்துப்போகிறதா என்று சரி பார்த்த பின்னர், முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டன.