கரோனா நோய் பாதிப்பு உலகம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் கரோனா நோய்க் கிருமியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் முகக்கவசத்துடன் சுற்றிவருகின்றனர். இதனால் முகக்கவச தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில் திருநெல்வேலி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு முகக்கவசம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டன் துணியினால் செய்யப்படும் இந்த முகக்கவசத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பார்வையிட்டார். இதனைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
அப்போது, ”கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்கங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அதிக நபர்கள் ஒரே இடத்தில் கூட வேண்டாம். இருமல், சளி உள்ளவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பேட்டி மேலும் அவர், ”பிலிப்பைன்ஸ், இத்தாலி, போன்ற நாடுகளில் இருந்தும், கேரளா மாநிலத்திலிருந்தும் பலர் சொந்த ஊரான இங்கு வந்துள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊர் திரும்பியது முதல் இதுவரை யாருடன் எல்லாம் பயணித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து வீட்டில் வைத்தே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா தனிப் பிரிவில் 12 நபர்களும், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் 20 முதல் 30 நபர்கள் அவரவர் வீட்டில் வைத்தும் கண்காணிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கரோனா நோய்க் கிருமியின் அறிகுறிகள் தீவிரப்படுமானல் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்” எனத் தெரிவித்தார்.