திருநெல்வேலி: தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை போன்று திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கரோனோ வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 832 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே போல் பொது இடங்களில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களையும் காவல்துறையினர் கண்காணித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று தினங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத 6,011 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கரோனோ நோய்த்தொற்று காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் வாகனம் ஓட்டும்போது முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 3 தினங்களில் மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்ற 5920 நபர்கள் மீதும் தகுந்த இடைவெளியை பின்பற்றாத 91 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 12 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.