தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக அரசு ஊழல் மிகுந்த விற்பனை அரசு - சஞ்சய் தத் - சஞ்சய் தத்

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருமே விவசாயிகளுக்கு எதிரானவர்கள். பாஜக ஒரு ஊழல் மிகுந்த விற்பனை அரசு என்று தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்

By

Published : Oct 24, 2020, 11:40 PM IST

திருநெல்வேலி: இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளருமான சஞ்சய் தத் இன்று (அக்.24) மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக என்பது ஊழல் ஜனதா கட்சி என்று தான் சொல்ல வேண்டும். ராகுல் காந்தி ஏற்கனவே கரோனா குறித்து எச்சரித்திருந்தார். பிரதமர் மோடி அந்த நேரம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்பதில் பிசியாக இருந்து விட்டார். அதன் விளைவு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ஜிஎஸ்டி வரி வருவாயை மாநிலங்களுக்கு சரியாக பங்களித்து கொடுப்பதில்லை. மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. இந்த நாள், இந்த நிமிடம் வரை சீனா 1000 கி.மீ., தூரம் வரை நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மையாகும். சீனா சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடியோ இந்திய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ஏழை எளிய மக்கள் மற்றும் தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்த அரசு தனியாருக்கு விற்பனை செய்கிறது. குறிப்பாக 5 முதல் 6 விமான நிலையங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இந்த அரசு எதையும் கட்டமைக்கவில்லை. பாஜக அரசு மொத்தத்தில் ஒரு விற்பனை அரசாக உள்ளது. நாட்டின் வளங்களைஅதானி, அம்பானி குடும்பத்திற்கு விற்பனை செய்து வருகிறது.

மத்திய அரசு விவசாயிகளை அழித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பல இடங்களில் தற்கொலை செய்து வருகின்றனர். ஆனால் நரேந்திர மோடி எப்போதாவது தற்கொலை செய்து கொண்ட ஏழை விவசாயி வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளாரா? காங்கிரஸ் விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் போராடி வருகிறது.

பிகாரிலுள்ள ஏராளமான பொதுமக்கள் பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். கரோனா காலகட்டத்தில் அவர்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். 500 கிலோ மீட்டர் தூரம் வரை பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சுமைகளை தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பேட்டி

பிகார் முதலமைச்சர் அந்த மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் பிரதமர் மோடி, நிதீஷ் குமாருடன் சேர்ந்து ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கப்படும் என்று தற்போது கூற முடியாது.

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முழு அளவில் தயாராகவுள்ளது” என்றார். தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதி கேட்கப்படும் என்று கேட்டபோது, நான் களத்தில் பணிபுரியும் வீரன் மட்டுமே. எனவே தொகுதி பங்கீடு குறித்து மற்றொரு குழுவினர் முடிவெடுப்பார்கள். அதே சமயம் திமுகவுடனான கூட்டணி மிக வலிமையாக உள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details