திருநெல்வேலி:மும்பை, குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்து மதத்தில் பல்வேறு பண்டிகைகள் நடைபெற்றாலும்கூட விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் இந்து மத அமைப்புகளும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னெடுத்துச் செல்வார்கள். அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நகரம், கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சிறியது முதல் பிரமாண்டம் வரை அவரவர்களின் தேவைக்குத் தக்கவாறு விநாயகர் சிலைகள் வைப்பர்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று அந்தச் சிலைகளுக்குப் பொதுமக்களால் விசேஷ பூஜைகள் செய்யப்படும்.
பின்னர், சில நாள்கள் கழித்து, அச்சிலைகளைப் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்துவிடுவார்கள். இந்தப் பண்டிகையை ஒட்டி ஏராளமான வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோடோராம் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்து, விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
ஆரம்பக் காலத்தில், சாலையோரம் வைத்து சிலை செய்துவந்த மோடோராம், தற்போது பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் குடோன் அமைத்து சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
சிலைகள் தயாராகும் முறை
இந்தச் சிலைகள் முழுக்க முழுக்கத் நீரில் கரையும் தன்மைகொண்ட சுண்ணாம்பு துகள்களைக் கொண்டு தயார்செய்யப்படுகின்றன. முதலில் சுண்ணாம்புத் துகள்களைத் நீரில் குழைத்து, பின்னர் குழைத்தவற்றை விநாயகர் உருவம் கொண்ட ரப்பர் அச்சுகளில் ஊற்றுகின்றனர்.
பிறகு சிலையின் அளவைப் பொறுத்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒருநாள் வரை ஊறவைத்து ரப்பர் அச்சிலிருந்து சிலைகள் வெளியே எடுக்கப்படுகின்றன. அச்சிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகளுக்குத் தொழிலாளர்கள் பெயிண்ட் மூலம் வண்ணம் தீட்டுகின்றனர்.
ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் இத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டுவருகின்றனர். இங்கு இரண்டு அடியிலிருந்து 10 அடி வரையிலான பிரமாண்ட விநாயகர் சிலைகள் விதவிதமான வடிவங்களில் பல வகையான வண்ணங்களில் தயார்செய்யப்படுகின்றன.
கடைசிவரை இழுபறி
தயார்செய்யப்பட்ட சிலைகள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் 20 ஆண்டுகளாக நல்ல முறையில் தொழில் செய்துவந்த மோடோராம் குடும்பத்தினருக்கு கடந்தாண்டு கரோனா ஊரடங்கு காலம், விற்பனை வாய்ப்புகளை முடக்கி அவர்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
அதாவது கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டிருந்தன. சிலைகளை வைக்க அரசு அனுமதி கொடுப்பதில் கடைசிவரை இழுபறி ஏற்பட்டது.
பின்னர் பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்காமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் சிலைகள் வைத்து வழிபட உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனை முழுவதும் தடைப்பட்டது.
பெரும் இழப்பு
அதேசமயம் விநாயகர் சதுர்த்தியை நம்பி மோடோராம் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளைத் தயார் செய்துவைத்திருந்தார். ஆனால் அரசின் உத்தரவால் சிலைகள் விற்பனையாகாமல் குடோனிலேயே தேக்கம் அடைந்தன.
இதனால் கடும் இழப்பைச் சந்தித்த மோடோராம், இந்த ஆண்டு எப்படியாவது சிலைகளை விற்று, லாபம் பார்க்க முடியாவிட்டாலும்கூட, தொழிலில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்துவருகிறார்.
விநாயகர் சிலை தயாரிப்பவரின் துயரம் ஆனால் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு சார்பில் இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் மோடோராம் போன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து விநாயகர் சிலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது கரோனா தொற்று பெருமளவு குறைந்திருப்பதால், இந்த ஆண்டு வழக்கம்போல் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை, சிலைகள் வைத்துக் கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே இத்தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
மீண்டும் ராஜஸ்தானுக்கே செல்ல வேண்டியதுதான்
இது குறித்து மோடோராம் நம்மிடம் கூறுகையில், “நான் ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா போன்ற பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்து சிலை செய்துகொடுத்துள்ளேன். தமிழ்நாட்டு மக்களை நம்பி திருநெல்வேலியில் கடந்த 20 ஆண்டுகளாகச் சிலை செய்துவருகிறேன்.
கடந்த ஆண்டு கரோனாவால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு கட்டுப்பாடு விதித்ததால் சிலைகள் விற்பனை ஆகவில்லை. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்துதான் இங்கேயே தங்கி உள்ளோம். கடந்த ஆண்டு சிலைகள் விற்பனையாகாததால் வாடகைப் பணம் கொடுக்கவில்லை, தற்போது வட்டிக்குப் பணம் வாங்கி சிலைகளைச் செய்துவைத்துள்ளோம்.
எனவே நிகழ்வு ஆண்டிலாவது தமிழ்நாடு அரசு சிலைகள் வைக்க அனுமதி வழங்கினால்தான் தொழிலில் போட்ட பணத்தை எடுக்க முடியும் இல்லாவிட்டால், மீண்டும் ராஜஸ்தானுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தொழில் அடியோடு அழிந்துவிடும் - உரிய அனுமதி தாருங்கள்
இதையடுத்து மோடோராம் மகன் தன்ராம் நம்மிடம் கூறுகையில், "நான் சிறு வயதாக இருக்கும்போதே எனது அப்பாவுடன் இங்கே தங்கியிருந்து இந்தத் தொழிலை கற்றுவருகிறேன். தற்போது மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுவருகிறோம்.
கடந்த ஆண்டு கரோனாவால், எங்கள் தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டது. நிகழ்வு ஆண்டிலாவது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
நிகழ்வு ஆண்டிலும் அனுமதி கிடைக்காவிட்டால், எங்கள் தொழில் அடியோடு அழிந்துவிடும். தமிழ்நாட்டு மக்களை நம்பி இதுவரை 300-க்கும் மேற்பட்ட சிலைகளைத் தயார் செய்துவைத்துள்ளோம். எனவே தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பொதுமக்களுக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்தார்.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் தொழிலாளர்கள்
இத்தொழிலாளர்கள் முழுக்க முழுக்க விநாயகர் சதுர்த்தி விழாவை மட்டுமே நம்பி தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவர்களுக்கு வருமானம் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு சிலைகள் விற்காமல் வருமானம் தடைபட்டதால் வாடகைப் பணம் கட்ட முடியாமல் கடும் வறுமையில் வாழ்ந்துவருகின்றனர்.
குறிப்பாக தங்கள் அன்றாடப் பசியைப் போக்கிக் கொள்ளகூட போதிய வசதி இல்லாததால் அருகில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் ரேஷன் அரிசியை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அதைத்தான் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.
எனவே இந்த ஆண்டு நிச்சயம் சிலைகளை விற்று கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை வெற்றியடைவது தமிழ்நாடு அரசின் கையில் மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க: கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை