திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் கரோனோ நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் வழங்கினர். இதற்கான நிகழ்ச்சியின் போது, ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் வழங்கி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் மாவட்டத்தில் இதுவரை இருந்த ஆக்சிஜன் பற்றாக்குறை, இனி இருக்காது என எதிர்பார்க்கிறோம்.
காந்திமதி அம்மன் பள்ளியில் அமைந்துள்ள கரோனோ சிகிச்சை மையத்தின் அனைத்து படுக்கைகளிலும் ஆச்சிஜன் வசதி ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட தட்டுப்பாடு, தற்போது சுத்தமாக இல்லை. அதே போல, மாவட்டத்தின் ஆக்சிஜன் கையாளும் திறனைப் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதற்காக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்டத்தின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சம் 950லிருந்து 500ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும், நேற்று மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளோம்.