கன்னியாகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பொழிந்துவருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டிவிட்டன. பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்து ஏறத்தாழ 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல, ஆற்று பாதையான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைகுறிச்சி, விக்ரமசிங்கபுரம், காரைக்குறிச்சி, பத்தமடை, நெல்லை கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிருக்கும் இந்த பகுதிகளில் வெள்ளத்தில் நெல் பயிர்கள் மூழ்கி நாசமடைந்துள்ளன. பயிர்கள் அழுகியதால் செய்வது அறியாமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கள ஆய்வுகளை நிறைவு செய்த பின் அதனடிப்படையில், அறிக்கை தயாரித்து இக்குழு அரசுக்கு சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நெல்லைக்கு இன்று (ஜன.14) வருகை தந்த அக்குழுவினர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினர்.