திருநெல்வேலி:வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டப திருவுருவச்சிலைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த சட்டபேரவைத்தலைவர் அப்பாவு, 'முதலமைச்சர் அறிவித்தபடி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வ.உ.சி மணி மண்டபத்தில் ஒலி - ஒளிக்காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
வ.உ.சி 150ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பாரதியார் 100ஆவது நினைவு தினம் ஆகியவையையொட்டி அவர்கள் இருவர் படித்த பள்ளியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவு வளைவானது முதலமைச்சர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட உள்ளது.
வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில், முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது அவர்களை பெருமைப்படுத்தும்படியாகவுள்ளது' என்றார்.