திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும்.
அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, வனத்துறை மற்றும் நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று (ஜனவரி 21) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
12-வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 90 பேர் பங்கேற்று 10 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம் , கால்தடம் , கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தன் குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து கங்கைகொண்டான் பெரிய குளம் , ராஜவல்லிபுரம் குளம் , நயினார்குளம், மானூர் பெரியகுளம், அரியநாயகிபுரம் குளம் திருப்புடைமருதூர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 14 குளங்களில் நேற்றும் (ஜனவரி 21), தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும் (ஜனவரி 22) இந்த கணக்கெடுப்பு பணி தொடர்கிறது.