தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாதி கயிறு கட்டுவதில் மோதல்: உயிரிழந்த மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - சாதி கயிறு கட்டுவதில் மோதல்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு
மாணவரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

By

Published : May 1, 2022, 7:16 AM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், நெல்லை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் பிளஸ் 2 மாணவன் ஒருவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (48) என்பவரின் 17 வயது மகன் செல்வசூர்யா (17). இவர் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி செல்வ சூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அடைச்சாணி மாணவருக்கும் இடையே கையில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் செல்வ சூர்யாவை பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேர் பெல்ட் மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கியதில் செல்வசூர்யாவின் காதில் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், மேல்சிகிச்சைக்காக அன்றிரவே மாணவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பிறகு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த மாணவன் செல்வ சூர்யா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஏப்ரல் 30) அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் கேட்டு மாணவன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஏற்கனவே பாப்பாகுடி காவல் நிலையத்தில் செல்வ சூர்யாவை தாக்கிய சைபுதீன் பவுசில் (16) சமீர் (16) சுடலை மணி (16) ஆகிய மூன்று மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு மேற்கண்ட மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாணவரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

இருப்பினும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் தனது மகனை கொலை செய்த சக மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நெல்லை வருவாய் கோட்டாட்சியர் சந்திர சேகர் தலைமையில் அதிகாரிகள் மாணவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவனின் தந்தை முருகன் தரப்பில் தனது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் தனது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவனின் உடலை வாங்க சம்மதித்தனர். இதையடுத்து உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவன் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் இடையே மோதல் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details