திருநெல்வேலி: நீர்வளம், தாய்கேர் மையம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாகப் பல முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையும் இன்றி பொது இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் முக்கிய அலுவலர்கள் அறை மற்றும் கவுண்டர்களுக்கு செல்வதற்காக டேக்டையில் எனப்படும் தொடு உணர்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்று நெல்லை மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவுப்படி பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வகையில் தொடு உணர்வு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த தொடு உணர்வு பாதைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.